Mon. Dec 23rd, 2024

கள்ளக்குறிச்சி விஷ சாராயம்.. மெத்தனால் எங்கிருந்து எப்படி வந்தது? விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தில், மெத்தனால் எங்கிருந்து எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 51ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்ட ஒரே நாள் விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.

அதன்படி, முதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசாரணையின் படி, கடந்த 17ம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கியுள்ளார். மெத்தனால் அடங்கிய 60 லிட்டர் 4 ட்யூப், 30 லிட்டர் 3 ட்யூப்கள், 100 சிறிய பாக்கெட்டுகள் சின்னத்துரையிடமிருந்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் வாங்கி உள்ளார்.

மெத்தனால் வாங்கிய கோவிந்தராஜன் சகோதரர் தாமோதரன், எப்போதுமே முதலில் குடித்து பார்த்து விட்டுதான் மெத்தனால் வாங்குவார். இந்த முறை வாங்கும்போது, “மெத்தனால் கெட்டுப் போய் இருப்பதாக” சகோதரர் கோவிந்தராஜ் மற்றும் மெத்தனாலை விற்பனை செய்த சின்னதுரையிடம் அவர் கூறியிருக்கிறார்.

கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால், அவரது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதற்கு சின்னதுரை, “மெத்தனால் கெட்டுப்போகவில்லை என்றும், அது உயர் ரக சரக்கு எனக் கூறி, விற்பனை செய்யுங்கள். பார்த்துக் கொள்ளலாம்” எனச்சொல்லி, கோவிந்தராஜிடம் விற்பனை செய்து உள்ளார்.

எப்பொழுதும் முழு பணத்தையும் பெற்றுக் கொண்ட பிறகே சின்னதுரை மெத்தனாலை விற்று வந்த நிலையில், 17 ஆம் தேதி கெட்டுப்போன மெத்தனாலை கொடுக்கும் போது முன்பணம் மட்டுமே பெற்று உள்ளார். சின்னதுரை மெத்தனால் விற்பனை வரலாற்றில் முதன் முறையாக முழு பணத்தை வாங்காமல் முன் பணத்தை பெற்றுக்கொண்டு மெத்தனாலை கொடுத்தது இதுவே முதல் முறை.

அத்துடன், சின்னதுரை மெத்தனாலை மாதேஷ் என்பவரிடமிருந்து பெற்றதும், மாதேஷ் ஆந்திராவில் இருந்து கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்ததும் தெரிய வந்து உள்ளது.

சின்னதுரை அளித்த தகவலின் பேரில், சின்னதுரை விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த மாதேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.

முக்கியமாக, சின்னதுரை நண்பர்களான மதன் குமார் மற்றும் ஜோசப் ராஜா ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மதன்குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் குண்டர் தரப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது தற்போது தெரியவந்து உள்ளது.

குறிப்பாக, சின்னதுரையின் மற்றொரு நண்பரான சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்பவர் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரில் தலைமறைவாக இருந்தபோது சிபிசிஐடி போலீஸ் கைது செய்து உள்ளனர்.

இந்த வழக்கில், இதுவரை கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், கோவிந்தராஜின் மனைவி விஜயா, கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் இவர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை, சின்னதுரைக்கு மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் மற்றும் சின்னதுரை நண்பர்களான ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகிய 7 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.

இவர்கள் கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா ஆகிய மூன்று நபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர். இந்த வழக்கில் மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தன நாள் வாங்கி உள்ளார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *