கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு நடிகர்கள் அமைதி காத்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் ராமராஜன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 51 ஆக உயர்ந்து உள்ளது. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் கண்டன அறிக்கையைத் தொடர்ந்து, நடிகர் ராமராஜனும் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது குறித்து நடிகர் ராமராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “50 மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. துயரத்தில் பங்கெடுக்கும்” என்று, தனது கிராமங்களின் எதார்த்தத்தை பதிவு செய்து உள்ளார்.
அத்துடன், “இங்கு 50 வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால் என்றும், கொரோனா கொத்துக் கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச் சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது” என்றும், வேதனை தெரிவித்து உள்ளார்.
மேலும், “இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால், இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டிச் செல்கிறது. மனிதர்களைக் குடி எப்படிக் கொல்கிறது என்பது நிகழ்காலப் பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது பல குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. சிதைக்கு அனுப்புகிறது” என்றும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.
முக்கியமாக, “இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்துகொள்ள வைக்கப் போகிறோம்? ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இழந்தவர்கள் அதிகம்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.
“அதுவும் இந்த கள்ளச் சாராய சாவுகள் இழப்பின் உச்சம். இதுக்கு காரணமானவர்கள் 50 பேரின் கொலையாளிகளாக தீர்க்கப்பட வேண்டும். நீதி தனது கடமையை செய்யும் என எப்போதும் நம்புபவன் நான். நிச்சயம் சட்ட வரைமுறைகள் அவர்களைத் தண்டிக்கட்டும். அரசு விரைந்து விசச் சாராய மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மனிதம் மிக உயர்ந்தது. அதைவிட நம்மை நாமாக வைத்துக் கொள்வது வேறெதுவுமில்லை. மனிதம் காப்போம். மரணம் தவிர்ப்போம்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், நடிகர் ராமராஜன் தனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து உள்ளார்.