“எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக சென்று வழங்குங்கள்” என்று, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அதிரடியாக உத்தரவு பிறபித்து உள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வரும் 22 ஆம் தேதி தனது 50 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக” கூறியுள்ளார்.
“அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும்” என்றும், அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதனிடையே, “Pls.. எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாமே..!” என்று, நடிகர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதே நேரத்தில், நடிகர் விஜய்யின் “துப்பாக்கி” திரைப்படம் இன்று ரீ-ரிலீஸாகி உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான “துப்பாக்கி” திரைப்படம், விஜய் கேரியரில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
நடிகர் விஜய் உடன் நடிகை காஜல் அகர்வால், ஜெயராம், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் விஜய்யின் கில்லி ரீ-ரிலீஸாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று “துப்பாக்கி” ரீ ரிலீஸாகி உள்ளது.
தற்போது வெளியாகி “துப்பாக்கி” திரைப்படம், கிட்டத்தட்ட 175 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த நிலையில், “துப்பாக்கி” படத்தை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.