ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணியில் இருப்பது குடும்ப பிரச்சினையா? அல்லது பள்ளி நிர்வாக கொடுத்த அழுத்தமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி என்ற டி என் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி 42 வயதான உமாதேவி, அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.
இவரது கணவர் ரவிக்குமார் என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ள நிலையில், இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு ஆசிரியர்களான கணவன்- மனைவி இவரும், வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் ஆசிரியை உமாதேவி மட்டும் மதியம் விடுப்பு கேட்டு வீட்டிற்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து இவரது கணவர் ரவிக்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, மனைவி படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார். மனைவி சடலமாக தொங்கியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த கணவர், உடனடியாக புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து விரைந்து வந்த புளியங்குடி காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “ஆசிரியை குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா? அல்லது வேலை பார்க்கும் பள்ளியில் வேறேதினும் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?”என்று கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை உடன் பணியாற்றி வந்த சக ஆசிரியையான நிர்மல் ஷோபனா பேசும் போது, “நான் கடந்த 7 வருடங்களாக இதே பள்ளியில் வேலை பார்த்து வந்தேன். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினராக உள்ள மணிவண்ணன் என்பவர் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் மாதம் தொகையைவசூல் செய்து கொடுக்க சொல்லி கட்டாய படுத்தவர். அதே போன்று, பல்வேறு விதத்தில் தொந்தரவு தருவதும் இவர் வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளை செல்போனில் வீடியோ மற்றும் படம் எடுத்து சொந்தரவு கொடுப்பார்” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், “இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டால் நீங்கள் மணிவண்ணனை அவரது கடைக்கு நேரில் சென்று பாருங்கள் எனக் கூறுவார் என்றும், இதனை தட்டி கேட்ட என் மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்திய நிலையில் பள்ளியில் நடக்கும் தவறுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றும், தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, என் மீதும் அவர் வேண்டுமேன்றே குற்றச்சாட்டுகள் கூறி, பள்ளியில் இருந்து என்னை சஸ்பென்ட் செய்தனர் என்றும், இதனால் என்னை போன்று பல்வேறு வகையில் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் அந்த ஆசிரியை தற்கொலை இறந்திருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியை பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இதனால், பள்ளி ஆசிரியையின் தற்கொலை, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.