விவாகரத்தால் கணவன் – மனைவி பிரிந்த நிலையில், அவர்களது குழந்தையின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்ற பெரும் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அதற்கு நீதிமன்றம் சூப்பர் அட்வைஸ் ஒன்றை வழங்கி உள்ளது.
கடந்தல கால வழக்குகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, விவாகரத்து வழக்குகள் ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 5, 10 ஆண்டுகளை காட்டிலும், குறிப்பாக, கடந்த 2,3 வருடங்களைக் காட்டிலும், இந்த ஆண்டு விவகாரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தம்பதியர் சமீபத்தில் நீதிமன்றம் முறைப்படி விவகாரத்து பெற்று பிரிந்து உள்ளனர். ஆனால், அவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று நிலையில் இது குறித்தான தீர்ப்பில் “குழந்தையின் தந்தை மாதத்தில் முதல் மற்றும் 3 ஆம் சனிக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பார்ப்பதற்கு தந்தைக்கு அனுமதி” வழங்கபட்டது.
ஆனால், எனது குழந்தையை அவரது தந்தை பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தையின் தாயார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தையின் தந்தை தரப்பில் வழக்கறிஞர் டி.பிரசன்னா ஆஜராகி, “குழந்தையை பார்ப்பதற்கு தனக்கும் அனுமதி அளிப்பதில்லை என்றும், குழந்தைக்கு வரும் 24 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ளதால், பிறந்த நாளில் தந்தையும் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும்” என்று, வாதிட்டார்.
ஆனால், இதற்கு குழந்தையின் தாயார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இப்படியாக, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தையின் தாயார், அவரது தந்தை மற்றும் மற்ற உறவினர்கள் ஜூன் 24 ஆம் தேதி, குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் காலை 11 மணிக்கு பிறந்த நாள் நிகழ்ச்சியை கொண்டாட அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
குறிப்பாக, “இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியை கவனிக்க தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்றும், அந்த நிகழ்வு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.