Tue. Jul 1st, 2025

“அண்ணாமலையின் சதிச்செயல் தான் விஷச்சாராய‌ சாவு!” – ஆர்.எஸ்.பாரதி பங்கம்

“அண்ணாமலையின் சதிச்செயல் தான் விஷச்சாராய‌ சாவு என்று, நான் சொல்வேன்!” என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தான் தமிழ்நாட்டில் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்து உள்ள நிலையில், தமிழக பாஜகவினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், “விஷச்சாராயத்திற்கும், விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கும் தொடர்பு உள்ளது என்றும், “அண்ணாமலையின் சதிச்செயல் தான் விஷச்சாராய‌ சாவு என்று, நான் சொல்வேன்!” என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அண்ணாமலை ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார். அவரது பேச்சுக்கும் செய்கைக்கும் எந்த தொடர்பு இல்லை. விருப்ப ஓய்வில் சென்ற எஸ்.பி. கள்ளச்சாராய நிகழ்வு தெரிந்து தான் சென்றதாக கூறுகிறார். ஆனால், அந்த எஸ்.பி.யே இன்றைக்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்து உள்ளார். ‘அதெல்லாம் பொய் நான் அப்படிப் போகவில்லை. எனது மருமகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காக விடுப்பு எடுத்து அமெரிக்காவுக்கு சென்றேன்’ என்று கூறி உள்ளார்” என்று, சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “இப்படி பொய் சொல்கிற மனிதனை வைத்துக் கொண்டு, அவர் எந்த காலத்தில் உண்மையை பேசி உள்ளார்” என்றும், கேள்வி எழுப்பி உள்ளார்.

“இந்த சாவுக்கு காரணம் யார்? என்று ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் டார்ஜிலிங்கில் ரயில் விபத்து ஏற்பட்டு அவ்வளவு பேர் உயிரிழந்தார்கள். அப்போது, மத்திய ரயில்வே மினிஸ்டர் ராஜினாமா செய்தாரா?” என்றும், கேள்வி எழுப்பினார்.

“நீட் தேர்வு கேள்வித் தாள்கள் எல்லாம் வெளியாகி உச்ச நீதிமன்றம் காரி துப்புகிறதே, பல பேர் இறந்து உள்ளார்களே.. அங்கே மத்திய அமைச்சர் ராஜினாமா செய்தாரா? நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது 137 பேர் சாராயம் குடித்து இறந்தார்களே? அப்போது அவர் ராஜினாமா செய்தாரா?” என்றும், அவர் கேள்விக்கு மேல் கேள்வியாக எழுப்பினார்.

குறிப்பாக, “ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னால், பாண்டிச்சேரியில் உள்ள முதலமைச்சர் தான் ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே இருந்து தான் சரக்கு வந்து உள்ளது, என்று காவல் துறையே சொல்கிறது. பாஜக ஆட்சியில் உள்ள அவங்க தான் இதை பண்ணி இருக்காங்க. அண்ணாமலை உடைய சதித் திட்டம் தான் இது என்று நான் சொல்கிறேன்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், “பாஜக கட்சி ஆளுகிற மாநிலத்தில் இருந்து தான் இது வந்திருக்கிறது என்று சொன்னால், விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இவர் அனுப்பி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு இருக்கிறது” என்றும், ஆர்.எஸ்.பாரதி காட்டமாக பேசினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *