“ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு எடுத்தால், நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது” என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப் பேரவையில் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதாம் நடைபெற்றது. அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக எம்.எல்.ஏ. அருள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ரகுபதி இடையே கார சார விவாதம் நடைபெற்றது.
அதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்.
அதன்படி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசும் போது, “ஒவ்வொரு சாதியும் பல பிரிவுகளாக உள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் 14 பிரிவுகளையும் இணைத்து அவர்களை கொங்கு வேளாளர் என்று குறிப்பிட்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார் கருணாநிதி. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ஒரு சாதிக்குள் இருக்கும் அனைத்து உட்பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்தி , அவர்களை ஒரே சாதிப் பிரிவாக கணக்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஒரு சமூகத்திற்குள் குறிப்பிட்ட சிலரே பலனடையும் வகையில் இல்லாமல் ஒரு சாதியில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார்.
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசும் போது, “எதிர்கால சந்ததியின் நலன் காக்கும் மன்றமாக இந்த மன்றம் உள்ளது. இங்கிருக்கும் 234 பேரும் மறைந்த பின்பு 200 ஆண்டுகள் கடந்த பின்னும் எதிர்கால தலைமுறை சண்டை சச்சரவு இல்லாமல் வாழும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் 208(3) அ – பிரிவின் படி மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என முதல்வர் கூறியுள்ளர். பிகாரில் மாநில அரசு நடத்திய இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் தடை செய்ய காரணம் அங்கு கணக்கெடுப்பில் குளறுபடி, தவறு இருந்ததுதான். 2012-ல் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மாநில அரசு தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார். முதல்வரின் தீர்மானத்தை பாஜக ஆதரிக்கிறோம். ஆனால், மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார்.
விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் பேசும்போது, “பறையர் சமூகத்தினர் 24 சதவீதம் உள்ளனர். பறையர் சமூகத்தினர் பறையர், ஆதிதிராவிடர் என்று இருவேறு பிரிவுபோல் பதிவு செய்யப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரையும் பறையர் என சேர்த்து பதிவு செய்ய வேண்டும். முதல்வரின் தனி தீர்மானத்தை விசிக ஆதரிக்கிறது என்றார்.
அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “2008 சட்டத்தின் படி மாநில அரசு கணக்கெடுப்பு எடுக்கலாம் என்று சொன்னாலும், இதை மத்திய அரசு திருத்தி எழுதும் அதிகாரம் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உண்டு. மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பே செல்லும். அதனால் தான், மத்திய அரசை வலியுறுத்துகிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு எடுத்தால், நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது” என்றும் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்த கவனியீர்ப்பு தீர்மானத்தில் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து, இது குறித்து கருத்த தெரிவித்த அன்புமணி ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க திமுகவிற்கு மனமில்லை” என்று, பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.
குறிப்பாக, “வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அமைச்சர் சிவசங்கர் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்” என்றும், அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்தார்.