Tue. Jul 1st, 2025

சென்னையில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறிதது முழு விவரமும் தெரிய வரும் என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசப்பன் என்பவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தேசப்பன், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று எண்ணூர் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள மதுபான பாரில் மது அருந்த சென்றிருக்கிறா்.

அங்கு மது அருந்தும் போது, அவருக்கும் எண்ணூர் பர்மா நகரை சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. போக போக, அதுவே கைகலப்பாக மாறி உள்ளது, அப்போது, பர்மா நகரை சேர்ந்த கும்பல், தேசப்பனை தாக்கியதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாகவே, அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததையடுத்து, தேசப்பன் அங்கிருந்து வீட்டிற்கு சென்று தூங்கி உள்ளார்.

வேலை நிமித்தமாக, வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்த தேசப்பனின் மனைவி தேவி அவரை தட்டி எழுப்பி உள்ளார்.

ஆனால், தேசப்பன் தூக்கத்தில் இருந்து எழாததால், அவரது மனைவி அச்சமடைந்த நிலையில், பதறி உள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அப்போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தேவி, இது குறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், “தேசப்பன் மது போதையில் ஏற்ப்பட்ட தகராறில் தாக்கியதால் இறந்தாரா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா?” என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *