“ஒரு கொலை நடந்தால், அதை அரசியல் கொலையாகவும், ஜாதிய கொலையாகவும் மாற்ற முயற்ச்சி நடப்பதாக” திரைப்பட இயக்குனர் பேரரசு காட்டமாக பேசி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டை பதற வைத்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதிய புதிய தகவல்கள் கசிந்துகொண்டே இருக்கிறது. கூடவே புதிய புதிய கைது நடவடிக்கைகளும் நடந்துகொண்டே இருக்கிறது.
அத்துடன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? கொலைக்கு பணம் கை மாறியதும் எப்படி? என்று பல்வேறு தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதுவரை 16 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் தான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் தலைமை தாங்கினார்.
இந்நிலையில், “ஒரு கொலை நடந்தால், அதை அரசியல் கொலையாகவும், ஜாதிய கொலையாகவும் மாற்ற முயற்ச்சி நடப்பதாக” திரைப்பட இயக்குனர் பேரரசு காட்டமாக பேசி உள்ளார்.
சென்னையில் நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குனர் பேரரசு , “ஒருவர் கொலை செய்யப்பட்டால், ஏன் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை விட, அதை அரசியல் கொலையாகவும், ஜாதிய கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர்.” என்று, காட்டமாக குற்றம்சாட்டினார்.
மேலும், “அனுதாபம் காட்டுவதை விட, சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர் என்றும், ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது, இறந்தவர் மீது ஜாதி வளையம் வைத்து ஜாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை” என்றும், அவர் வலியுறுத்தினார்.
“சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு, கொலைக்கு ஆளும் கட்சியை காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு, கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு. கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும். சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும். எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவது, நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்” என்றும், இயக்குனர் பேரரசு பேசினார்.
இதனிடையே, திரைப்பட இயக்குனர் பேரரசு பேசியது ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்தும், அந்த கொலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதற்கு பதிலடியாக உள்ளதாகவும் இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.