அரசுப் பள்ளி வளாகத்தில் சிறுநீர் கழிக்க சென்ற மாணவனை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மேல் முருகம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பிடம் இல்லாததால், பள்ளிக்கு சற்று தொலைவில் பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ள கழிப்பிடம் அருகில் முட்புதரில் மாணவர்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர்.
அதன்படி, வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று மாணவர்கள், மாலை 3 மணி அளவில் அங்குள்ள முட்புதரில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளனர். அப்போது, 4 ஆம் வகுப்பு படித்து வரும் மேல்முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் இரண்டாவது மகன் 9 வயதான சபரி, பள்ளி அருகில் முட்புதர் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது, அந்த மாணவனை சாரைப்பாம்பு கடித்து உள்ளது. இதில், மாணவன் அலறியுள்ளார்.
உடனடியாக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு உடனடியாக திருத்தணி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளியில் மாணவனை பாம்பு கடித்த சம்பவம கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் கழிப்பிட வசதி, சுற்றுச்சூவர் இல்லாததாலும், பள்ளியில் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதாகவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அத்துடன், மாணவனை பாம்பு கடித்த சம்பவம் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பள்ளிக்கு விரைந்து வந்து, பள்ளியில் சுற்றுப்புறத்தில் அடர்த்தியாக வளர்ந்துள்ள செடி கொடிகள் பொக்லைன் மூலம் ஆகற்றி சுத்தப்படுத்தி வருகின்றனர்.