யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
யூ டியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என்று கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால், காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால், “யூ டியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால், பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், அவற்றை கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்” என்றும், மனுவில் கோரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வு, அந்த மனுவுக்கு அடுத்த நான்கு வாரங்களில் பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இதனால், கூடிய விரைவில் யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த புதிய புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.