“உதயநிதி துணை முதல்வர் ஆனால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓட போகிறதா? இப்போது ஓடுவதை போல கள்ளச்சாராய ஆறு தான் ஓடும்” என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “இன்று உள்ள அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும், அந்த கோபத்தை திசை திருப்பும் விதமாக அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றும், குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிகாரிகள் இடமாற்றத்தால் மட்டும் இந்த மக்களின் எதிர்பார்ப்பை, கோரிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என இந்த 3 ஆண்டுகளில் நிரூபணமாகிவிட்டது” என்று, குற்றம்சாட்டினார்.
அத்துடன், “முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை உள்ளிட்ட 8 உதவி தொகைகளை விரிவு படுத்த வேண்டிய நிலை உள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தை முடக்கி வைத்துள்ளது இந்த அரசு, 1500 ரூபாய் கொடுப்போம் என சொல்லி, 1200 மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால், அதிமுக ஆட்சியில் சில தளர்வுகளை அறிவித்து பொதுமக்களுக்கு பயன்பெரும் வகையில் செயல்படுத்தினோம். முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்த முதியோர் உதவி தொகை வழங்கும் திட்டத்தை முறைபடுத்தி தகுதி உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.
குறிப்பாக, “கொலைகளின் பட்டியல் உயர்ந்து கொண்டே இருக்கிறது கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை என்றும், மக்கள் அச்சமின்றி நடந்து செல்ல இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றும், பாதுகாப்பு இல்லாது தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும், அவர் விமர்சனம் செய்தார்.
முக்கியமாக, “உதயநிதி துணை முதல்வர் ஆனால், நாட்டில் பாலாறும் தேணாறும் ஓட போகிறதா” என்று கேள்வி எழுப்பிய அவர், “இப்போது ஓடுவதை போல், கள்ளச்சாராய ஆறு தான் ஓடும்” என்றும், மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.
“தமிழ்நாட்டில், மாணவர்கள் போராட்டம், மீனவர்கள் தர்ணா, விவசாயிகள் போராட்டம் என நடைபெறும் போது ஒலிம்பிக் போட்டியை பார்க்க உதயநிதி சென்றிருக்கிறார். அவருக்கு சுப முகூர்த்தம் குறித்திருப்பதாக ஒரு அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் சொன்னது கோரிக்கை வழுத்துள்ளது அது இன்னும் பழுக்கவில்ல என சொல்லி உள்ளார். எப்போது பழுக்குமோ எப்போது அழுகுமோ என தெரியவில்லை” என்றும், அவர் காட்டமாக பேசினார்.