15-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் எதிரொலியாக, தலைமை ஆசிரியரை மாற்ற கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று 12 ஆம் வகுப்பு வகுப்பறையில் வாசனை திரவியம் ஒன்று கீழே விழுந்து உடைந்தது. இதில், அதிக அளவில் நறுமணம் வீசிய காரணத்தினால், அந்த பள்ளி வகுப்பறையில், 15 க்கு மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் ஏற்பட்டு செங்கோட்டை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு, மாணவிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெற்றோர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கியமாக, இந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கலந்த சில மாதங்களாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தற்போது தலைமை ஆசிரியரை மாற்ற கோரி மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.