நடிகர் விக்ரம் நடித்துள்ள “தங்கலான்” படத்தை வெளியிடும் முன்பு, ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் என்று, பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தை கொடுத்து வைத்து உள்ளனர் என்றும், இவர் அந்த இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில், நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் மரணம் அடைந்து விட்டார் என்றும் கூறப்பட்டது.
இவரது சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.
அந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இது வரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க கோரி, சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
அதில், 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு, 2013 ஆம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என்று சேர்த்து சுமார் 26 கோடியே 34 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளது.
அந்த உத்தரவில், “தங்கலான்” படத்தை வெளியிடும் முன், அதாவது ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன் பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
அதே போல், அடுத்த படமான “கங்குவா” படத்தை வெளியிடும் முன்பு, ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணம் டிபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.