“எங்களுக்கு அரசு மதுபான கடை வேண்டும்” என்று, 7 கிராம மக்கள் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
“தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சே அள்ளி ஊராட்சிக்குட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், பலிஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமத்து மக்களுக்கு அருகாமையில் எதுவும் அரசு மதுபான கடை இல்லாததால், பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி மதுபான கடைக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும், தருமபுரி – பென்னாகரம் சாலையில் ஆதனூரில் இருந்த அரசு மதுபான கடையை அகற்றி விட்டதால், 20-க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் மதுபானம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்” என்றும், கூறியுள்ளனர்.
இதனால், “இந்தப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சந்து கடைகளில் அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஒரு குவாட்டருக்கு மேல் 150 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதனால், இந்த ஊர் மட்டுமல்லாது அருகில் உள்ள குக்கிரமங்களில் உள்ள மதுப்பிரியர்கள் மது அருந்த பென்னாகரம் நோக்கியே செல்ல வேண்டி உள்ளது. இதில், பல்வேறு இடர்பாடுகள் சந்திப்பதாகவும், இரவு நேரங்களில் வாகனங்களில் மதுக்கடைகளுக்கு செல்லும் பொழுது விபத்துக்கள் நேர்வதாகவும்” சம்மந்தப்பட்ட கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதனால், “ஆதனூர் கிராமம் அதனைச் சுற்றியுள்ள கிராமத்து பெண்கள் ஒன்றினைந்து தங்களது ஊரில் மதுபான கடை இருந்தால், கணவர்கள் பாதுகாப்பாக உள்ளூரிலேயே மது அருந்திவிட்டு இருப்பார்கள்” என்று கூறி, குடும்பத்துடன் வந்து மதுபான கடையை தங்கள் ஊரில் திறக்ககோரி ஆட்சியரிடம், 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனுஅளிக்க வந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.