ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதால், போலீஸ் காவல் செல்ல மறுத்து ரவுடி நாகேந்திரன் அடம் பிடித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 23 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், திருவேங்கடம் என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் விசாரணைகளும், கைது படங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரனின் மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமனை போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்தும் போது, ரவுடி நாகேந்திரன் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதெல்லாம், நாகேந்திரன் செல்போனில் அஸ்வத்தாமனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வது தொடர்பாக, ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரனை விசாரிக்க 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், “ஏற்கனவே 2 ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தான் 25 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறேன் என்றும், தான் ஓரிரு வருடங்களில் வெளியே வர உள்ள நிலையில், தான் வெளியே வரக்கூடாது என மீண்டும் பொய்யாக தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், தனக்கும் இந்த வழக்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று, நாகேந்திரன் நீதிபதியிடம் முறையிட்டு உள்ளார்.
அத்துடன், “தான் சிறையில் தொடர் கண்காணிப்பில் உள்ளேன் என்றும், எப்படி சிறையிலிருந்து சதி திட்டம் தீட்ட முடியும்?” என்றும், நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், “தனது உடல் நிலை பாதிக்கப்பட்டு, வாரத்திற்கு இரண்டு முறை டையாலிஸிஸ் செய்து வருவதாகவும், இதனால் கஸ்டடிக்கு அனுப்ப வேண்டாம்” என்று, நாகேந்திரன் நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து, ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் கொடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதால், போலீஸ் காவல் செல்ல மறுத்து ரவுடி நாகேந்திரன் அடம் பிடித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.