திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று, செய்திகள் வெளியாகி உள்ளன.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
அதாவது, திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கியமான மாநில நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த கூட்டத்தில், செப்டம்பர் மாதம் முப்பெரும் விழாவை எங்கு நடத்துவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், திமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்வு உள்ளிட்ட கட்சியில் சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வரும் நிலையில், இது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் பேசப்பட்டு வரும் நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது.