முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. சசிகலா சிறைக்கு சென்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது என அதிமுக-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டன. கடைசியாக, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க, ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஆனால், நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுக-வில் இரட்டை தலைமை பிரச்சினை தலைத்தூக்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதில், அதிமுகவிற்கு உரிய இரட்டை இலை சின்னமும் ஆட்டம் கண்டது. யாருக்கு ஒதுக்க வேண்டும், யாருக்க ஒதுக்கக் கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக காய் நகர்த்தப்பட்டது.
அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அதிமுக செயல்பட ஆரம்பித்தது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை நீதிமன்றமும் ஒப்புதல் அளிக்க, அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழைய வழக்குகள் இன்னும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. அப்படியொரு வழக்கு தான் தற்போது அதிமுகவை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
அதாவது, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இஅலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ‘அதிமுகவின் கட்சி திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும், உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 – 2022 ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்து இருந்தேன்.
தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சூரியமூர்த்தி வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். எனவே, அவரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தான், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.