பப்பில் நடனமாடிய கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் 22 வயதான முகமது சுகைல், ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, அங்கேயே எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றைய தினம், சென்னை வந்த அவர் பெண் தோழிகளுடன் முகமது சுகைல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பப்புக்கு சென்று உள்ளார்.
அங்கு முகமது சுகைல், தனது நண்பர்களுடன் நடனம் ஆடிவிட்டு அங்குள்ள உணவை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மீண்டும் முகமது சுகைல் நடனம் ஆடிய போது, அவர் திடீரென மயக்கம் அடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், பப் ஊழியர்கள் உடனடியாக முகமது சுகைலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், “வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக” கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், தங்களது முதற்கட்ட விசாரணையில், “கல்லூரி மாணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம்” என்று, முதல்கட்டமாக சந்தேகித்து உள்ளனர்.
அத்துடன், “கல்லூரி மாணவனுக்கு, உணவு செரிமானம் ஆகாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? உட்கொண்ட உணவில் ஏதேனும் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் உடலில் பிரச்சனைகள் உள்ளதா?” என்கிற கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“ஹாஸ்டல் மற்றும் வெளியே தங்கி படிக்க கூடிய இளைஞர்கள் வெளி உணவை உட்கொள்வதை கலாச்சாரமாக வைத்திருப்பதாகவும், பழைய உணவு மற்றும் கண்ட நேரத்தில் உண்பதால் உடலில் பிரச்சனை ஏற்பட காரணமாகிறது என்றும், வெளி உணவு அருந்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும்” என உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.