மது போதையில் போலீசை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை வளசரவாக்கம் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 23 வயதான கோகுல் ராஜன், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் நேற்றிரவு மது போதையில் பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த புகார் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோகுல் ராஜனிடம் விசாரித்தனர். அப்போது, போலீசாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய கோகுல், யாரும் எதிர்பார்க்காத வகையில் தலைமை காவலரான சுனில் என்பவரை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், கோகுலை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரிக்க முயன்ற போது அவர் அதீத மது போதையில் இருந்ததால், முகவரியை மட்டும் வாங்கிக் கொண்டு விட்டுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலையில் கோகுலை வளசரவாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, காவலர் ஒருவரை மது போதையில் இளைஞர் கன்னத்தில் அடித்த சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பேசும் பொருளாகி உள்ளது. இது போன்று தவறில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.