சித்தூரில் நகரப் பகுதியிலேயே பட்டப் பகலில் துப்பாக்கியுடன் வந்த 6 பேர் கும்பல், வணிக நிறுவனத்தின் உரிமையாளரை கடுமையாக தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடைபெற்ற இந்த சம்பவம் சித்தூர் மாவட்டத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சித்தூரில் உள்ள காந்தி ரோடு சாலையில் லட்சுமி திரையரங்கம் அருகில் புஷ்பா கிட்ஸ் வேர்ல்ட் என்கிற வணிக நிறுவனத்தை நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர், வீட்டின் அருகிலேயே சிறிய அளவிலான வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இன்று காலை வீட்டில் இருக்கும் பொழுது ஆம்னி வேனில் அங்கு வந்த 6 பேர் கும்பல், 2 துப்பாக்கிகளுடன் சென்று சந்திரசேகரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
குடும்பத்தாரின் கூச்சலை கேட்டு பொது மக்கள் திரண்டு சம்பவ இடத்திலேயே துப்பாக்கிகளுடன் வந்த மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து உள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிகளுடன் வந்து தாக்குதல் நடத்திய ஆறு பேரில் 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2 கை துப்பாக்கிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து திருப்பதியில் உள்ள ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து டி2 சித்தூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு துணிகரமாக துப்பாக்கியுடன் வந்து தொழிலதிபரை வீட்டில் வைத்து தாக்கிய சம்பவம், சித்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.