சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வீண்தகராறு செய்து பெண்ணை தாக்கி, செல்போனை பறித்துக் கொண்டு சென்ற நபர் கைது. திருடப்பட்ட ஐ-போன் மீட்கப்பட்டது.
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும் 34 வயது பெண் ஒருவர் நுங்கம்பாக்கம் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, முத்தையா தினேஷ்குமார் என்பவருடன் கடந்த 5 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு, மேற்படி முத்தையா தினேஷ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனதால் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த 19.03.2025 அன்று மாலை, மேற்படி பெண் மசாஜ் சென்டரில் இருந்தபோது, அங்கு வந்த முத்தையா தினேஷ், மேற்படி பெண்ணிடம் வீண் தகராறு செய்து, மசாஜ் சென்டரில் உள்ள மின்னனு சாதனங்களை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, அப்பெண்ணை கையால் தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த மசாஜ் சென்டர் மேனேஜரை பிளாஸ்டிக் சேர் எடுத்து தாக்கி, இரத்த காயம் ஏற்படுத்திவிட்டு, அப்பெண்ணின் ஐபோனை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து 34 வயது பெண், F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரி முத்தையா தினேஷ்குமார், வ/33, த/பெ.ராஜு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பழவந்தாங்கல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் ஐபோன் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட முத்தையா தினேஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.