ஆதவ் அர்ஜூனா பிரபல வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பிறப்பால் முதலமைச்சரை உருவாக்கும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை கடுமையாக விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
கூட்டணிக்குள் இருக்கும்போதே, திமுகவை வெளிப்படையாக விமர்சித்து பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இதையடுத்து, டிசம்பர் 07, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் இது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீரகுலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.