திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகிறது. இத்திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மாமனிதர்களாக திகழ்ந்த ஒவ்வொருவரையும் மக்கள் கொண்டாடத் தவறியது இல்லை. அப்படி, மக்கள் கொண்டாடித் தீர்த்த தலைவர்களை தமிழ் சினிமாவும் கொண்டாடத் தவறியதில்லை என்றே சொல்லலாம்.
அதன்படி, மகாகவி பாரதியார், கர்ம வீரர் காமராஜர், தந்தை பெரியார், முன்ளாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இதுவரை வந்திருக்கிறது.
அந்த வரிசையில் தான், உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. உலகப் பொதுமறையான “திருக்குறளை” உலகமே கொண்டாடித் தீர்த்து வருகிறது. இந்த சூழலில் தான் சற்று வித்தியாசமாக யோசித்து, திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திருக்குறளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தின் பூஜை, முன்னதாக சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்து உள்ளது.
அதாவது, ஏற்கனவே காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தான், திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றையம் திரைப்படமாக எடுக்க முன் வந்திருக்கிறது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட “காமராஜ்” படம், தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு, காமராஜரின் வரலாற்றுக்கான ஆவணமாகவும் திகழ்ந்து வரகிறது. காமராஜ் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் கே.ஜெயராஜ் தான், “திருவள்ளுவர்” படத்திற்கான திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். “திருவள்ளுவர்” படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
முக்கியமாக, படத்தில் திருவள்ளுவராக கலைச் சோழன், வாசுகியாக தனலட்சுமி, நக்கீரனாக சுப்பிரமணிய சிவா, பாண்டிய மன்னனாக ஓஏகே சுந்தர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். படத்திற்கு எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
பூஜைக்குப் பிறகு பேசிய இயக்குநர் பாலகிருஷ்ணன், “திருக்குறளின் உள்ளார்ந்த ஒலியை, அதன் உயிர்ப்பை 3 மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது என்பது, அத்தனை எளிதான வியமில்லை. ஆனாலும் கூட, எங்களால் முடிந்தவரை சிறப்பாக கொடுக்கிறோம்” என்றும் என்றார்.
“திருவள்ளுவரோடு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டையும், இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும்” குறிப்பட்ட அவர் “மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு உட்பட பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளும் குறித்தும் இத்திரைப்படத்தில் இடம் பெற உள்ளதாகவும்” கூறினார்.
மேலும், “அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் பேச இருப்பதாகவும்; மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால 5 நில மாந்தர்களும் “திருவள்ளுவர்” திரைப்படத்தல் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.