நண்பரின் புதிய ஓட்டல் திறப்பு விழாவிற்கு எந்த வித ஆரவாரம் எதுவுமின்றி மிகவும் எளிமையான முறையில் நடிகர் ஆர்யா வந்த சென்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பிரியாணி கடையை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக காட்டுப்பாக்கம் வந்த நடிகர் ஆர்யா, மிகவும் எளிமையாக அங்கு வருகை புரிந்தார்.
எந்த வித ஆரவாரமின்றி அங்கு வந்த நடிகர் ஆர்யா, புதிய பிரியாணி கடையை குத்து விளக்கு ஏற்றி, திறந்து வைத்தார்.
பொதுவாக, கடை திறப்பு விழாவிற்கு நடிகர்கள் வருவது என்றால் பேனர்கள், மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்புகளும் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், நடிகர் ஆர்யா தனது நண்பரின் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு எந்தவித ஆரவாரமும் இல்லாமல் எளிமையான முறையில் வந்து திறந்து வைத்து விட்டு சென்றார்.
கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஆர்யா வந்த பிறகு தான், அங்கு அவர் வந்திருக்கிறார் என அங்கிருந்த பலருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, நடிகர் ஆர்யாவை காண சிலர் வந்தனர். இருப்பினும், நண்பரின் பிரியாணி கடையை எளிமையான முறையில் திறந்து வைத்து விட்டு, அங்கு உணவு அருந்திவிட்டு நடிகர் ஆர்யா அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.