நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜராக வாக்குமூலம் அளித்தார்.
நடிகர் வடிவேலு Vs நடிகர் சிங்கமுத்து விவகாரம் ஊர் அறிந்த ரகசியம்!
அதாவது, “நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை” என்று, நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிரபல யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக கூறி, “5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரியும், நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும்” எனவும், நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, “நடிகர் வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்” என்றும், த்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு நேரில் ஆஜர் ஆகி, வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “இந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய் மொழியாகவோ, எழுத்து பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நடிகர் சிங்கமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், வடிவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளதாகவும், அதை பதிவு செய்ய வேண்டும் எனவும், இரண்டு வார காலம் ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதை பதிவு செய்துகொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி, “வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதாகவும், அங்கே முறையீட்டு கொள்ளுங்கள் உயர் நீதிமன்றம் முடிவு எடுக்கும்” என தெரிவித்தார்.
இதனை அடுத்து, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்து வைத்து உத்தரவிட்டார்.