“அப்பா வயதுடைய ஒரு இயக்குனர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்” நடிகை அஷ்வினி நம்பியார் பரபரப்பு குற்றச்சாட்டு
“அப்பா வயதுடைய ஒரு சினிமா இயக்குனர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்” என்று, கிழக்குச் சீமையிலே புகழ் நடிகை அஷ்வினி நம்பியார் பகிரங்கமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்ரப ஏற்படுத்தி உள்ளது.
“கிழக்குச் சீமையிலே” புகழ் அஷ்வினி நம்பியார் தற்போது கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி இருக்கிறது. அப்பா வயதுடைய ஒரு இயக்குனர் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சொல்லியிருக்கிறார். சாய் வித் சித்ராவில் பேட்டி கொடுத்த போதும் அந்த சம்பவத்தை பற்றி விவரித்திருக்கிறார். அந்த சம்பவம் நடந்த படப்பிடிப்பு “கிழக்கு சீமையிலே” என்றும், அந்த இயக்குனர் பாரதிராஜா என்றும் பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்ன?
அந்த சம்பவம் நடந்த போது. டீனேஜில் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். 1990-ல் “புது நெல்லு புது நாத்து” படத்தில் அறிமுகமாகிறார். அப்போது, 10 வது படிக்கும் பெண். அதன் பிறகு 3 வருடம் கழித்து மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் “கிழக்குச் சீமையிலே” படத்தில் நடித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் “கிழக்குச் சீமையிலே” படம் நடிக்கும் போது, அவர் டீனேஜில் இருக்க வாய்ப்பிருக்கிறது.
அந்த சம்பவத்தின் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அதன் பிறகும், 1999 வரை தொடர்ச்சியாக படங்கள் நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் படங்கள் குறைவு தான்.
அந்த இயக்குனர் யாரென்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பாரதிராஜா தான் சித்ரா லட்சுமணனின் குருநாதர். இன்றளவும் நல்ல நட்புடன் இருக்கிறார். அப்படி இருக்கும் போது, தனது குருநாதரின் பெயர் கெடும்படியான ஒரு பேட்டியை சித்ரா எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
அதே சமயம், தற்போது அந்த இயக்குனரைப் பார்த்தால் தைரியமாக நலம் விசாரிப்பேன் என்று அஸ்வினி சொல்வதில் இருந்து, அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று தெரிகிறது.
எப்படி இருந்தாலும், டீனேஜில் நடந்த குரூர சம்பவத்தை தற்போது பொது வெளியில் சொல்லவே ஒரு தைரியம் வேண்டும். அனேகமாக, இது தொடர்பாக சித்ராவே சில நாட்களில் விளக்கம் தருவார் என்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
*- மகாதேவன் சி*