Mon. Jun 30th, 2025

சட்டப்பேரவையில் அமளி துமளியில் ஈடுபட்ட அதிமுக!

தமிழக சட்டப் பேரவையில் பதாகை ஏந்தியதாக 13 அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அந்த உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்றார். 

தமிழக சட்டப் பேரவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது, தமிழக சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது பேச முயன்ற எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் அப்பாவு, நீதிமன்றத்தில் உள்ள பொருள் குறித்து பேரவையில் பேச அனுமதியில்லை என திட்டவட்டமாக கூறினார்.

அதிமுக ஆட்சிக்காலத்திலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டதாகவும், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் பொருள் குறித்து பேசுவதற்கு பேரவை விதிகளில் இடமில்லை என அவை முன்னவர் துரைமுருகன் பேசினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கள் அனைத்தும் நீக்குவதாக அறிவித்த பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் முழக்கத்தை எழுப்பியதோடு, ஒரு சிலர் பதாகை ஏந்தியும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். தன்னுடைய அனுமதியின்றியும், பேரவையின் இசைவின்றியும் பதாகை ஏந்திய போராடிய அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.

சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைக்கு உரிய விளக்கத்தை அளித்த பின்னரும் வெளிநடப்பு செய்திருப்பதாக கூறினார்.

மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பின் அதிமுக வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி தான் சிக்கியிருக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க ஒரு சிலர் காலில் விழுந்திருக்கிறார் எனவும், அதை எல்லாம் பார்த்து நொந்து நூடுல்ஸாக இருக்கும் அதிமுகவினர் தான் தியாகிகள் எனவும், முதலமைச்சர் பதவிக்காக ஒரு அம்மையார் காலில் விழுந்தாரே அந்த அம்மையார் தான் தியாகி எனவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, “ஏற்கனவே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக பதாகை ஏந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்ற விதிகளின்படி கூட்டத்தொடர் முழுவதும் பேரவை நிகழ்வில் பங்கேற்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் உத்தரவை மறுபரிசீலனை செய்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேரவை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்த அப்பாவு, பதாகை ஏந்திய 13 அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் மட்டும் அவை நிகழ்வில் பங்கேற்க முடியாது எனவும், நாளை முதல் அவை நிகழ்வில் பங்கேற்க அனுமதி” வழங்கி, உத்தரவு பிறப்பித்தார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *