தினமும் காலை நேரத்தில் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நமது உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இருந்து உடல் வலியை குறைப்பது வரை நடைபயிற்சி பல அற்புதங்களை செய்கிறது. தற்போது தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
மன அழுத்தத்தை குறைக்கும்
உடற்பயிற்சி குறிப்பாக நடைபயிற்சி செய்வது, மூளையில் ஹாப்பி ஹார்மோன்களான எண்டோர்பின்களை அளவை அதிகரிக்கிறது. அதே சமயம், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இது மனதையும் உடலையும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.
உடல் எடையை குறைக்கும்
எல்லா உடற்பயிற்சிகளும் கலோரிகளை எரிக்கின்றன. இருப்பினும், வெறும் 15 நிமிடங்கள் நடப்பது, உடலில் சுமார் 100 கலோரிகள் எரிக்கிறது என்பது தான் ஆச்சரியம். இதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த வழியாகும். எனவே, தினமும் 15 நிமிடங்கள் நடப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. இவை குறைந்தாலே இதய நோய்கள் எதுவும் நம்மை நெருங்காது.
நல்ல தூக்கத்தை வரவழைக்கும்
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உடலில் இயற்கையாகவே தூக்க ஹார்மோனான மெலடோனின் விளைவுகளை அதிகரிக்கிறது. இது இரவில் நன்றாக தூங்க உதவும். இரவு தூங்கினால் நாள் முழுக்க உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
பொதுவாக, சுறுசுறுப்பாக இருக்கும்போது, இரத்த நாளங்கள், தசைகள் உட்பட உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு செல்கிறது. தசை திசுக்களில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகின்றன.