நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது இக்கோவில். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்ய வருவதுடன், கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. இதனால் ஆண்டு முழுவதும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இடமாக திகழ்கிறது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு.
அவ்வகையில் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்த அவர் விரைவாக சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் சார்பாக வழங்கப்பட்ட பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டார். ரசிகர்கள் சிலர் அவருடன் பக்தர்கள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.