நடிகை கௌதமி மற்றும் அவரது சகோதரியின் சொத்துக்களை அபகரித்த புகாரில் அழகப்பனை போலீசார் மீண்டும் கைது செய்து உள்ளனர்.
நடிகை கௌதமி, சிறுவயதிலிருந்து சினிமா துறையில் சம்பாதித்த சொத்துக்களை நிர்வகிப்பதற்காகவும், அவற்றின் சிலவற்றை விற்பனை செய்வதற்காகவும் அழகப்பன் என்பவரை நம்பி நடிகை கௌதமி பொது அதிகாரம் வழங்கியிருந்தார்.
ஆனால், அதனைத் தவறாக பயன்படுத்தி தனது 25 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாக சேர்ந்து அபகரித்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கௌதமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர்.
இதனையடுத்து, கேரளாவில் பதுங்கி இருந்த அழகப்பன் மற்றும் குடும்பத்தினர் என 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், நிபந்தனை ஜாமீன் அவர் பெற்றிருந்தார்.
முக்கியமாக, சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர், திருவண்ணாமலை காஞ்சிபுரம், ராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித் தனியாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடிகை கௌதமி 2 புகார்களை அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளை அழகப்பன், ரகுநாதன் சுகுமாரன் பலராமன் ஆகிய நான்கு பேர் மீது பதிவு செய்யப்பட்டது.
அதே போல், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூரில் உள்ள 1.07 ரூபாய் கோடி மதிப்புள்ள தனது நிலத்தை கவனித்துக் கொள்வதாக பவர் அதிகாரம் பெற்று 60 லட்சத்துக்கு மோசடியாக விற்பனை செய்ததுடன், அதற்கான தொகையையும் தனக்கு கொடுக்கவில்லை என்று, கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் அழகப்பன், பலராமன் ஆகிய 2 பேர்மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கவுதமியின் சகோதரர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் தனி அதிகாரம் பெற்று 60 லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ளார். அதன் பிறகு, இதனை சில மாதங்கள் கழித்து 1 கோடி 63 லட்சத்துக்கு விற்று உள்ளா்ர. இப்படி, மோசடியாக விற்பனை செய்ததுடன், அந்தத் தொகையையும் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பாக கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் இருக்கும் அழகப்பனை, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தற்போது மீண்டும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.