“எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை சொல்லியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என்று நேற்று நடைபெற்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சர்ச்சையாக வெடித்ததுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், “நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து திரித்து சிலர் குறை சொல்கிறார்கள். மோடியின் அரசாங்கம்தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது.
அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அம்பேத்கரை பற்றி நேரு குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. ஆனால் அம்பேத்கரின் வரலாற்று புகழை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்றது பாஜக அரசுதான். அம்பேத்கர் குறித்து எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.