Tue. Jul 1st, 2025

தமிழ்நாட்டின் பாடத்திட்டம் குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை!”

“தமிழ்நாட்டின் பாடத்திட்டம் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை” என்று, முன்னாள் IAS அதிகாரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிகாந்த் செந்தில் பதிலடி கொடுத்து உள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் விதமாக, Sasikanth Senthil IAS பதிவிட்டுள்ள பதிவில், “நீங்கள் மும்மொழிக் கொள்கை பற்றி பேசும் போது, உங்களிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி – தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வி முறை கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகம் பல வடமாநிலங்களை விட கல்வியில் முன்னிலையில் இருக்கும்போது, தோல்வியடைந்த கல்விமுறைகளை நம்மீது கட்டாயமாகத் திணிப்பதன் நோக்கம் என்ன?

நீங்கள் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு, UPSC தேர்வை இழுத்துக்கொண்டு வந்தது நீங்கள்.

மும்மொழிக் கொள்கை என்பது வடமாநிலங்களை முன்னேற்றம் அடைய செய்யும் திட்டம் அல்ல. அது மொழித் திணிப்பு, அதன் வழியே கலாச்சார ஒழிப்பு என்ற பயங்கர செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே!

இப்போது UPSC தேர்வைப் பற்றி பேசலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக கல்விக் கொள்கையில் எந்த முக்கியமான மாற்றங்களும் இல்லை. ஆனால், தமிழக மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறும் எண்ணிக்கை ஏன் மோசமாகக் குறைந்தது? இதற்கு பதில் ஒரே ஒன்று – மோடியின் அரசு தமிழகத்தையும் மற்ற பிற இந்தி பேச மாநிலங்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கேற்ப மாற்றிவிட்டது.

2011-ல் UPA அரசு CSAT முறையை அறிமுகப் படுத்திய பொழுது கட்டாய தகுதி தேர்ச்சி இல்லாதப்போது 2015ல் மோடி அரசு CSAT தேர்வை கொடிய தகுதிச் சோதனைப் தேர்வாக மாற்றியதே ஒரு பெரிய மோசடி! இதனால் என்ன நடந்தது?

•இந்த CSAT-ல் முக்கியமான புரிதல் (Comprehension) பகுதி ஹிந்தி மாணவர்களுக்கு ஹிந்தியில் இருக்கிறது, ஆனால் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் அதை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இது நியாயமா?

•CSAT ஏன் CAT (Common Admission Test) போல மிகப்பெரிய ரீதியில் கடினமாக மாற்றப்பட்டது? இது IAS தேர்வா, M.B.A. தேர்வா?

•இதுவரை முக்கியமாக அரசியலமைப்பு, வரலாறு, சமூகநீதி போன்றவற்றில் சிறந்த தமிழகம் மற்றும் பிற மாநில மாணவர்கள், இந்த CSAT சிக்கலில் சிக்கி, தேர்வில் தோல்வியடைய வைக்கப்பட்டார்கள்.

•General Studies-ல் Cutoff 105 இருக்கும்போது, அதில் 130+ மதிப்பெண் வாங்கிய மாணவர்களும், CSAT பாஸ் செய்ய முடியாமல் வெளியே தள்ளப்பட்டார்கள்.

•இந்த தேர்வு ஒரு அறிவு முறைமையைச் சோதிப்பதற்கானதா, இந்தி பேசாத மாணவர்களை போட்டியிலிருந்து நீக்குவதற்கானதா?

இந்தியாவில் இருப்பது ஒரு மாநிலம், ஒரு இந்தி மொழி மட்டுமல்ல! தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பெங்கால், மகாராஷ்டிரா – எல்லா மாநிலங்களும் இதே விவகாரத்தில் மத்திய அரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனால், அண்ணாமலை, நீங்கள் முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

•ஏன் ஒன்றிய பாஜக அரசு CSAT தேர்வு முறையில் மொழி மற்றும் சிக்கலான aptitude-based hurdle-களை உருவாக்கி, வடமாநில மாணவர்களுக்கு மட்டுமே பயன் தரும் மாதிரி மாற்றம் செய்தது?

•ஏன் UPSC தேர்வில் மற்ற மாநில மாணவர்களை புறக்கணித்து, ஒரு மையத்துவ அரசுத் தேர்வு முறையை நடத்தியது?

•ஏன் UPSC தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெகு அளவில் குறைந்தது?

இதைப் பற்றிப் பேச முடியாமல், சமூக வலைதளத்தில் உங்கள் அடியாட்களை தனி நபர் தாக்குதலுக்கு அனுப்பாமல், நேரடியாக பதில் தரவும்.

தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியலை விளையாட்டாக நினைப்பது உங்களின் தவறு. தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் தமிழர்களுக்கெதிராக செயல்படும் எந்த அரசியலுக்கும் எதிராகவே அந்த அரசு இருக்கும்.

இந்தியில் எழுதினால் வெற்றி, தமிழில் எழுதினால் தோல்வி – இதை நியாயம் என்றா சொல்கிறீர்கள்? இடஒதுக்கீட்டில் படித்து, IPS தேர்வு பெற்று, அந்த இடஒதுக்கீட்டையே எதிர்க்கும் நீங்கள் இதை நியாயப்படுத்துவதில் வியப்பில்லை!

மோடியின் அடிமையாக இருந்தால், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா?

உங்களின் அரசியலையும் உங்களின் தலைவரையும் காப்பாற்ற மட்டும் பேசாமல், உண்மையைப் புரிந்து, நேரடியாக பதில் சொல்லுங்கள்!

தமிழர்கள் உங்களின் ஒவ்வொரு தவறான முடிவையும் நினைவில் வைத்திருக்கிறார்கள் – இந்த UPSC விவகாரமும் அதில் ஒன்று!

தமிழ்நாட்டில், தமிழனாய் பிறந்து இருந்தாலும், தமிழருக்கெதிராக RSSன் கைக்கூலியாய் இருந்து கொண்டு, மோடி அவர்களை சந்தோஷப்படுத்தும் ஒரே நோக்கில் தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் பண்ணையார் மனநிலையில் இருக்கும் அண்ணாமலை அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் – இது BJP-RSS தமிழர் மேல் நடத்தும் ஒரு திட்டமிட்ட மொழி, இன மற்றும் கல்வி அடக்குமுறை.

அண்ணாமலை அவர்களே, தமிழர் விரோதி பாஜகவை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்!

@annamalai_k” என்று, Sasikanth Senthil IAS பதிவிட்டு உள்ளார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *