“சாக்லேட், பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி பள்ளி குழந்தைகளிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாக்குவதா?” என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொந்தளித்து உள்ளார். “தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை தெரிவித்து உள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால், தமிழக மக்களிடம் மும்மொழிக் கொள்கையின் நன்மையை எடுத்துரைக்கும் வகையில், தமிழகத்தில் கையெழுத்து இயக்கத்தை பாஜக முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், நேற்றைய தினம் சென்னை ECRf சாலையில் உள்ள அரசுப் பள்ளி வெளியே நின்ற பாஜகவினர் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் சாக்லேட், பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி பள்ளி குழந்தைகளிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாக்குவதா குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் பெரும் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற உள்ள பள்ளி கட்டிட திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தலைமையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர் “மத்திய அரசு மும்மொழிக்கொள்கை விவகாரத்தில் தமிழகத்தின் மொழி சென்டிமெண்டை புரிந்து கொள்ளவில்லை” என்று, வேதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “தாய் மொழி நம் உயிர் என்பது அவர்களுக்கு புரியவில்லை” என்றும், வருத்தம் தெரிவித்தார்.
அத்துடன், “புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் போது, முறையான வல்லுநர்களின் கருத்தை கேட்டு அதனை வடிவமைக்க வில்லை” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
“மத்திய அரசு 2000 கோடி ரூபாயை தருவதாக நிர்பந்திப்பது தவறு என்றும், கொள்கை மற்றும் மரியாதையை இழந்து நிதியை பெற வேண்டிய அவசியம் தமிழ்நாட்டிற்கு இல்லை” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
மேலும்,“நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் அனைத்து கட்சியினரும் ஒன்றாக செயல்பட்டு தீர்வு காண வேண்டும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ்அழைப்பு விடுத்தார்.
“மத்திய அரசு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி கையெழுத்தை பெற தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்களில் நின்று கையெழுத்து வாங்குகின்றனர். வேண்டுமெனில் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்குங்கள். ஆனால், பள்ளி வாசல்களில் நின்று கொண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து கையெழுத்து பெறுவது ஏன்? என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.
“இப்படி, தவறான முறையில் பள்ளி குழந்தைகளை ஏமாற்றி கையெழுத்து பெறும் நபர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசமாக எச்சரித்தார்.