Chennai Pol
“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, அரசியல் காரணங்களுக்காக நடக்கவில்லை” என்று, சென்னை போலீஸ் கமிஷ்னர் விளக்கம் அளித்து உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதன்படி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை” என்று, விளக்கம் அளித்தார்.
அத்துடன், “ஆம்ஸ்ட்ராங் கொலையான அடுத்த 3 மணி நேரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் தான்” என்றும், கமிஷ்னர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், “கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும்” தெரிவித்த அவர், “ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்த விதமான கொலை மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
முக்கியமாக, “தேர்தலின் போது, ஆம்ஸ்ட்ராங் தனது கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவரது கைத்துப்பாக்கி அவரிடமே திருப்பி ஒப்படைத்து விட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.
“ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருத்ததாகவும், இது குறித்து அவர் நீதிமன்றத்திற்கு சென்று அனைத்து வழக்குகளில் இருந்து அவரை விடுவித்து விட்டதாக” கூறினார்.
“கைதான நபர்களில் அருளை தவிர, அனைத்து நபர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்திற்கு உரிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
“ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது என்றும், அப்படி வரும் தகவல்கள் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேசினார்.