ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு “ஸ்கெட்ச்” போட்டு கொடுத்தது கைதாகி இருக்கும் வழக்கறிஞர் அருள் தான் என்பது, போலீஸாரின் விசாரணையில் தகவல் தெரிய வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இந்த சூழலில் தான், சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல், கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டு வந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள், திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர், நண்பர்கள் சிலரின் உதவியோடு ஆம்ஸ்ட்ராங் செயல்பாட்டை முழுவதுமாக கண்காணித்து வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தற்போது தெரிய வந்து உள்ளது.
அதாவது, வழக்கறிஞர் அருள், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், பொன்னை பாலு ஆட்கள் தான், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும், போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ஆயுதங்களை வாங்கி கொடுத்ததும் வழக்கறிஞர் அருள் தான் என்பதும் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் முடிந்த பிறகு, ஆயுதங்களை அருளிடம் தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததாகவும் தெரிய வந்திருக்கிறது.
போலீஸ் காவலில் அருளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான், ஆயுதங்கள் எங்கு பதுக்கி வைத்திருந்தது என்பது தெரிந்தது. திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வீட்டில் தான் இந்த ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்து போலீசார் அதனை கைப்பற்றி இருக்கிறார்கள்.
முக்கியமாக, வழக்கறிஞர் அருள் மற்றொரு வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த படுபயங்கர கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும், போலீஸ் விசாரணையில் தற்போது தெரிய வந்திருக்கிறது. இதனால்ஈ அருளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேலும் முடுக்கி விட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.