விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது புகழ்பெற்ற டைல்ஸ் குறித்து நடிகரும் போட்டியாளருமான தீபக் தவறான கருத்தை கூறியது சர்ச்சைக்கு உள்ளானது.
அதாவது, உலக பிரசித்தி பெற்ற செட்டிநாடு பாரம்பரியமான ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என்று உண்மைக்கு மாறாக கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபக் கூறியிருக்கிறார். எனவே, இந்த தவறான கருத்தை கூறிய தீபக் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காரைக்குடி காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.
இதன் மூலம் எங்கள் தொழிலுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தி, எங்களுடைய தனிச்சிறப்பையும் இழிவுபடுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர்கள் கூறியதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. எனவே, எங்கள் மீது வீண்பழி சுமத்தி அவதூறு பரப்பிய விஜய் டிவி நிர்வாகத்தின் மீதும், ட்டைல்ஸ் நிறுவனத்தின் மீதும் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முதல்வர், பிரதமர், மத்திய தொழில்துறை அமைச்சகம் அனைத்திலும் புகார் கொடுக்கப்படும் என்றும் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.