இன்றைக்கு பெரும்பாலானோர் அதீத முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மற்றும் நிற்பது, ஊட்டச்சத்து குறைபாடு, முதுகுத் தண்டு வலுவில்லமால் இருப்பது, உடல் பருமன், மன அழுத்தம், கனமான பொருட்களை தூக்குவது போன்றவை காரணங்களாக அமைகின்றன. இந்த வலியில் இருந்து தப்பிக்க தைலம், மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்வார்கள்.
ஆனால், அவை அனைத்தும் தற்காலிமானவையே. இருப்பினும், எளிமையான ஒரு உடற்பயிற்சி எப்படியாப்பட்ட மூதுகுவலியையும் ஈஸியாக குறைத்துவிடும். அதுதான் நடைபயிற்சி. தினமும் 30-45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது முதுகுவலியை குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, நடைபயிற்சி செய்வது முதுகுவலிக்கு எப்படி நிவாரணம் அளிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நடைபயிற்சி செய்வது முதுகுவலிக்கு எப்படி நிவாரணம் அளிக்கிறது?
உடற்பயிற்சி செய்யும் போது, இயற்கையான வலி நிவாரணியான எண்டோர்பின் போன்ற ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்கிறது. இந்த எண்டோர்பின்கள் வலியின் மீதான உணர்வைக் குறைத்து, மனநிலையையும் அதிகரிக்கச் செய்கிறது.
நடைபயிற்சி செய்வதால், முதுகெலும்பை உறுதிப்படுத்தும் மைய, முதுகு மற்றும் கால் தசைகளை ஈடுபடுத்தப்படுகிறது. இது, முதுகெலும்பை தாங்கும் தசைகளை பலப்படுத்துகிறது. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.
பொதுவாக, சுறுசுறுப்பாக இருக்கும்போது, இரத்த நாளங்கள், தசைகள் உட்பட உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால், உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிமையாக கிடைப்பதோடு தசை திசுக்களில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகின்றன.
உட்கார்ந்த வாழ்க்கை முறை தசைகள் மற்றும் மூட்டுகள் பலவீனமடைய செய்யும். தினமும் நடைப்பயிற்சி செய்வது கீழ் முதுகு மற்றும் உடலின் மற்ற இடங்களில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
நடைபயிற்சி உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரித்து ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், கீழ் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
நாள்பட்ட முதுகுவலி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது முதுகுவலியைப் போக்க மறைமுகமாக பங்களிக்கிறது என்றே சொல்லலாம்.