இந்த காலத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து விஷயங்களுமே மாறிவருகின்றன. அதில் தூங்கும் விதமும் ஒன்று. நாள் முழுக்க ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றோம். அதனால் உடல் மிகுந்த அசதியாக இருக்கும். எனவே கட்டில், மெத்தையில் படுத்து தூங்கினால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம்.
ஆனால், உண்மையில் கட்டில், மெத்தையை விட தரையில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருப்பதோடு, உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. தற்போது, இந்த பதிவில் தரையில் படுத்து தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
முதுகெலும்பு வலுவாகும்
தினமும் இரவு முழுவதும் கிட்டத்தட்ட 8-9 மணிநேரம் மெத்தையில் படுத்திருப்போம். அப்போது, மெத்தையின் மென்மை தன்மைக்கு ஏற்றவாறு நமது உடலை வளைத்து தூங்குவோம். இப்படி உடலை வளைத்து தூங்குவதால் உடல் தோரணை மாறுகிறது.
இது தசை விறைப்பு, முதுகு வலியை உண்டாக்கும். ஆனால், தரையில் படுக்கும்போது முதுகெலும்பு நேராக இருக்கும், மொத்த உடல் எடையும் தரைக்கு சென்றுவிடும். இதனால், முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் இருக்காது, வலுவாக இருக்கும்.
முதுகு வலி நீங்கும்
நம்மில் பெரும்பாலானோர் மெத்தை, கட்டிலில் படுப்பதற்கு காரணமே இந்த முதுகுவலி தான். ஆனால், முதுகுவலியோடு மெத்தையில் தூங்கினால் இன்னும் தான் அதிகரிக்குமே தவிர குறையாது.
ஏனென்றால், மெத்தையில் படுக்கும்போதும் நமது உடலின் ஒட்டுமொத்த எடையும் முதுகெலும்பின் மீதே விழும். அதுவே தலையில் படுக்கும்போது, முதுகெலும்புக்கு அழுத்தம் எதுவும் இருக்காது, முதுகுவலியில் இருந்தும் விடுபடலாம்.
உடல் சூடு தணியும்
தினமும் இரவில் மெத்தையில் படுத்து தூங்கும்போது, உடல் வெப்பம் முழுவதையும் மெத்தையே தக்கவைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக, மெத்தை படுக்கும்போது எப்போதும் சூடான உணர்வை தரும். அதுமட்டுமல்லாமல், உடல் சூட்டையும் அதிகரித்துவிடும்.
ஆனால், தரையில் தூங்கும்போது தரையின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்கும். இதனால், உடலில் உள்ள வெப்பம் விரைவாக தணிந்துவிடும். தூக்கமும் நன்றாக வரும். தரையில் தூங்கும்போது பாய் பயன்படுத்துவது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
தரையில் தூங்குவதில் கிடைக்கும் முக்கிய நன்மையே இது தான். ஏனென்றால், கட்டில், மெத்தையில் தூங்கும்போது உடல் பகுதிகளில் ஆங்காங்கே அழுத்தம் ஏற்படும். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது.
ஆனால், தரையில் படுக்கும்போது அந்த பிரச்சனை இருக்காது. இரத்த ஓட்டம் சீராக இருக்கும், தசைகள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.