உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அதுல் சுபாஷ், பெங்களூருவில் மரத்தஹல்லி பகுதியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று அதுல் சுபாஷ் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மேலும், 24 பக்க தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தன்னுடைய மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது உறவினர்களால் எந்தளவிற்கு கொடுமைகளை அனுபவித்தார் என்பதை உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அதுல் சுபாஷின் 24 பக்க தற்கொலை கடிதம்..
அந்த கடிதத்தில், “தனது மனைவி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தாலும், தன்னிடம் இருந்து ரூ.40 ஆயிரம் வரை ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகை வாங்கிக் கொள்கிறார். இது போதாது என்று விவாகரத்திற்கு பின் மாதம் ரூ.4 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டார். மேலும், எங்களின் 4 வயது மகனுக்கும் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
எங்களுடைய வழக்கு உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் நடந்து வந்தது. அந்த பெண் நீதிபதி பராமரிப்பு தொகையை ரூ.40 ஆயிரமாக குறைக்க வேண்டுமென்றால், 4-5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதை கொடுக்கவில்லை என்றதும் ரூ.2 லட்சம் பராமரிப்பு தொகை கொடுத்தே ஆக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக பல லட்சங்களை கொடுத்துள்ளேன். ஆனால், கடைசியில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. என் மனைவியின் தந்தை எனக்கு திருமணமான உடனேயே உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
ஆனால் நான் வரதட்சணை கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்தவிட்டதாக கூறி என்னுடைய குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த வழக்கை முடிப்பதற்காக எனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் முதலில் ரூ.1 கோடி கேட்டனர். ஆனால், பின்னர் அதை ரூ.3 கோடியாக உயர்த்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுல் சுபாஷின் 90 நிமிட வீடியோ பதிவு..
இறப்பதற்கு முன்பு அதுல் சுபாஷ் கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் உட்பட 9 வழக்குகளை தனது மனைவி தனக்கு எதிராகப் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த வழக்குகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நான் சம்பாதிக்கும் பணம் என் எதிர்களை பலப்படுத்துகிறது.
எனவே, நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வது தான் நல்லது. ஏனென்றால், நான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதே பணம் என்னை அழிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சுழற்சியாக தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வழக்கை தனது மனைவி வாபஸ் பெற்றால், அதன் பின்னர் புதிய வழக்கை தாக்கல் செய்வார் என்றும் திருமண சண்டையே தனது இறப்புக்கு காரணம்.
இந்தியாவில் சட்டங்கள் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவாகவே உள்ளது. இதனால் உண்மையில் நீதி கிடைக்க வேண்டிய ஆண்களுக்கும் நீதி கிடைப்பது இல்லை” என்றும் சுபாஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.