“காதலர் தினம் பற்றி பேசும் இளைஞர்களுக்கு, எமர்ஜென்சி வரலாறு குறித்து தெரியவில்லை!” என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேசி உள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்தின் 49 ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பாஜக சார்பாக நாடு முழுவதும் இன்று கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
அப்போது, “எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டு 21 மாதங்கள் கொடுமையை பலர் அனுபவித்தார்கள் என்றும், காதலர் தினத்தை பற்றிக் கூறும் இளைஞர்கள், எமர்ஜென்சி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை” என்றும், தமிழக இளைஞர்களை காட்டமாக சாடினார்.
குறிப்பாக, “இந்தியாவில் எமர்ஜென்சிக்கு முன்னரே எமர்ஜென்சிக்கான சூழலை இந்திரா காந்தி உருவாக்கி இருந்தார் என்றும், இந்திராகாந்திக்கு போரடித்தால் மாநிலங்களில் ஆட்சியை கலைப்பார் என்றும், அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை” என்றும், மிக காட்டமாக பேசினார்.
“எமர்ஜென்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மக்கள் மீதான அச்சத்தில் இந்திரா காந்தி வெளிநாடு செல்லும் திட்டம் இருந்தது என்றும், இந்திரா காந்தி அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி இருந்தால், நாடு முன்னேறி இருக்கும்” என்றும், மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.
அத்துடன், “இந்திரா காந்திக்கு சேவை செய்யவே இந்தியா உள்ளதாக இந்திரா காந்தி நினைத்துக் கொண்டதாக இருப்பதே அவர்களின் கடந்தகால வரலாறு என்றும், அரசியலமைப்பு சட்டத்தின் பக்கம் நாம் எப்போதும் இருக்க வேண்டும்” என்றும், அண்ணாமலை வலியுறுத்தினார்.