அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் ஜாமீன் கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை என்று கூறி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது அங்கு வந்த சிலர், திடீரென்று சேற்றை வீசினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, “உண்மையிலேயே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நபர் யார்?” என்று, தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது பொது மக்கள் கிடையாது என்றும், அது பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது சகாக்கள் என்பதும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது திருவெண்ணை நல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து, பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது சகாக்களை போலீசார் கைது செய்ய சென்ற போது, அவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர். இதனையடுத்து, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது சகாக்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், தன் மீது தவறாக வழக்கு பதியபட்டு உள்ளதாகவும், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், அவர்கள் கூறியுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.