பிரசனையை தடுக்க வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில், தணிகை அரசு என்பவர் வேனில் மாத கட்டணத்தில் சவாரி ஏற்றுவதற்கு மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்திருக்கிறர். அப்போது, அதே கல்லூரியில் சவாரி ஏற்றும் வேன் உரிமையாளரான பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உட்பட 6 ஓட்டுநர்கள் “எதற்காக அத்துமீறி கல்லூரியில் நுழைந்து குறைந்த விலையில் சவாரி ஏற்றுவதாக துண்டு பிரசுரங்கள் தருகிறாய்?” என்று, கேட்டு தணிகை அரசை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அப்போது, முதல்வர் கான்வாய் பணிக்காக தி.நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலட்சுமி இந்த பிரச்னையை தடுக்க முற்பட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் உதவி ஆய்வாளரை தள்ளி விட்டு உள்ளனர். அவரும் கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண் உதவி ஆய்வாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், விஜய் ஆனந்த், கோபி நாதன், ராஜேஷ் குமார், கோபி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.