“இந்தியாவில் தொடங்கப்படும் சாதி சங்கங்களை, மற்ற சங்கங்களைப் பதிவு செய்வதை போல முறையாக பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?” என்ற கேள்வி எழுந்து உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சங்கங்கள் முறையாக செயல்பட்டு பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் கூட, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்பதை முறையாக பதிவு செய்யப்பட்ட சங்கமாக படத்தில் காட்சிப்படுத்தி இருப்பார்கள். இப்படியாக எல்லா வித வணிகம் மற்றும் நிறுவனங்கள் என்று அனைத்திற்கும் இங்கு சங்கங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான், “சாதி சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?” என்ற, கேள்வி தற்போது எழுந்து உள்ளது.
அதாவது, தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், “சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பெயரில் சாதியை சேர்த்துள்ள நிலையில், அங்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என, பாடம் நடத்தும் நிலையே உள்ளது” என்று, உயர் நீதிமன்றம் வேதனையுடன் தனது கருத்தை பதிவு செய்தது.
குறிப்பாக, “சாதி பெயரில் சங்கம் துவங்க முடியுமா?” என்று, கேள்வி எழுப்பிய நீதிமன்றம், “சாதியை நிரந்தரமாக்குவதை, அந்த சங்கம் இலக்காக கொள்ள முடியுமா?” என்றும், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், இந்த வழக்கு குறித்து “தமிழக அரசு பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.