ECR சாலை கானாத்தூரில் பெண்களை இளைஞர்கள் காரால் துரத்திய விவகாரத்தில், புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை ECR முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இரவு நேரத்தில் பெண்கள் சிலர், பயணம் செய்து உள்ளனர். அப்போது, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள், அந்த பெண்கள் சென்ற காரை வழிமறித்து சாலையின் குறுக்கே 2 கார்களையும் நிறுத்தி வழி மறித்து அடவடி செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக, அந்த பெண்கள் சென்ற காரானது, சம்பந்தப்பட்ட பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின் தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டியாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பரபரப்பான புகார் அளித்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பெரிய அளவில் வைரலான நிலையில், தமிழக அரசுக்கும், போலீசாருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், சென்னையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிட்டதா என்று எதிர் கட்சிகள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தமிழக அரசை விமர்சித்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே, நள்ளிரவு நேரத்தில் பெண்களை காரில் துரத்திய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு என்ற இளைஞர் தனிப்படையினர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “அவர் திமுக கட்சியை சேர்ந்தவர் இல்லை என்றும், அவரது உறவினர்களே சிலர் அதிமுகவில் இருப்பதாகவும்” வாக்குமூலம் அளித்தான்.
மேலும், “காரின் முன்பு திமுக வின் கட்சியை கொடியை வைத்தது, டோல்கெட்டில் கட்டணம் செலுத்தாமல் செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே என்றும், தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை” என்றும், சந்துரு விளக்கம் அளித்திருந்தான்.
இந்நிலையில்தான், இந்த வழக்கின் மற்றொரு திருப்பதாக, பெண்களை இளைஞர்கள் காரால் துரத்திய விவகாரத்தில், புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், ஒரு கி.மீ தொடர்ந்து பெண்கள் வந்த காரை மோதுவது போல், துரத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
அப்போது, பெண்கள் தப்பிக்க சென்ற போதும், அவர்கள் சாலையை வழி மறித்து நின்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. காரை இடித்து விட்டு சென்றால், தங்களது காரில் இருந்து இறங்குமாறு அந்த நபர்கள் கூறுவார்கள். ஆனால், ஒரு இடத்திலும் தங்களை அப்படி கூறவில்லை எனவும், துரத்தும் செயலில் மட்டுமே ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.
இவ்விவகாரத்தில், ஏற்கனவே 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.