திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சினிமா பாணியில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்மைய நாயக்கனூர் பகுதியில் சில நாட்களாக கால்நடைகள் மற்றும் விவசாய மின் மோட்டார் வயர்கள் குறி வைத்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அழகம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் கொட்டத்தில், கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை இரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், ஆடுகளை திருடி தோளில் சுமந்து கொண்டும் சென்றார். அதன் தொடர்ச்சியாக, மற்றொரு ஆட்டை கயிற்றைப் பிடித்து இழுத்து கொண்டு திருடி சென்றார். அந்த மர்ம நபர் ஆடுகளை ஒவ்வொன்றாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு நடித்த திரைப்பட காமெடி பாணியில், ஆடுகளை திருடும் நிஜமான சூனா.. பானாகளை பிடித்து கைது செய்ய வலியுறுத்தி, கார்த்திக் காவல் நிலையத்தில் மனு அளித்தார். அத்துடன், அம்மையநாயக்கனூர் போலீசார் ஆடுகளை திருடும் திருட்டும் கூட்டத்தை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்படியான தொடர் திருட்டுகளை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொது மக்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மற்றொரு நிகழ்வாக, “எடப்பாடியார் எதை செய்தாலும் வெற்றி வெற்றி வெற்றி” என்று, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்னதாக அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அப்போது குடிநீர், மோர், இளநீர், தர்பூசனிப்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் “கோடை காலத்தில் மக்களுக்காக குடிநீர், பழ வகைகள், ரோஸ் மில்க் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் முழுவதுமாக மக்களுக்காக நீர் மோர் வழங்க இருக்கிறோம். பதனீர் உடல் நலத்திற்கு நல்லது. ஆகவே, செய்தியாளர்கள் பதநீர் அருந்தி செல்லுங்கள். அதிமுக பலம் வாய்ந்த கட்சி, எடப்பாடியார் எதை செய்தாலும் வெற்றி வெற்றி வெற்றி” என்றும், செல்லூர் ராஜு தெரிவித்தார்.