காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட டிவி பெண் தொகுப்பாளினி, மீண்டும் புதிய புகாரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்து உள்ளார்.
அதாவது, டி.வி பெண் தொகுப்பாளினியை கோயில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே 28 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, கார்த்திக் முனுசாமி ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அதன்படி, கடந்த 18 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, அவர் சிறைக்குள் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் தான், பாதிக்கப்பட்ட டிவி தொகுப்பாளினியான அந்த பெண், மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் புதிய புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், “நான் கொடுத்த புகாரில் கைதாகி சிறையில் இருந்து கார்த்திக் முனுசாமி, வெளியே வந்து விட்டார். இதுவரை, நான் கொடுத்த புகாரை யாரிடமும் சரியாக விசாரிக்கவில்லை.
இந்த வழக்கில் சம்பந்தபட்ட பக்தவச்சலம் என்பவருக்கு எல்லா உண்மைகளும் தெரியும்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“கோயில் அர்ச்சகர் காளிதாஸ் மற்றும் கார்த்திக் முனுசாமி இருவரும் எந்தெந்த பெண்களுடன் தவறாக பழகி என்னவெல்லாம் செய்தார்கள் என்கிற எல்லா உண்மைகளும் பக்தவச்சலத்திற்கு தெரியும். ஆனால், போலீசார் அவரிடம் இதுவரை விசாரிக்கவில்லை. ஸ்வேத்தா என்பவர் காளிதாஸிற்கு கைக்கூலியாக செயல்பட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருகிறார். காளிதாஸ் என்பவருடன் தகாத உறவு வைத்துள்ள ஜெயாசித்ரா என்பவர் தான் முதல் முதலாக கார்த்திக் என்பவர் எப்படிபட்டவர் என்றும், எந்தெந்த பெண்களுடன் தவறான தொடர்பில் இருக்கிறார் என்றும் தெரிய படுத்தினார். ஆனால், அவரிடமும் போலீசார் விசாரிக்கவில்லை” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக, “இப்படியான சம்பவங்கள் அனைத்தும் கார்த்திக் முனுசாமியின் மனைவி பிரியாவிற்கு நன்றாக தெரியும். அவரிடமும் போலீசார் விசாரிக்கவில்லை. இதற்கான ஆதரங்களுடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது வரையிலும் தீவிரமாக எந்த ஒரு விசாரணையும் செய்து அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
நான் கொடுத்த புகாரை சரிவர விசாரணை செய்ய வேண்டும். மேலும், நான் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள் பக்தாவச்சலம், அருணாச்சலம், காளிதாஸ், ஸ்வேத்தா, சத்யராஜ், பிரி ஆகியோரை தீவிரமாக விசாரித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பாதிக்கப்பட்ட டிவி பெண் தொகுப்பாளினி தனது புகாரில் வலியுறுத்தி உள்ளார்.