காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணன் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்த 54 வயதான அற்புதம், அவரது கணவர் இறந்த நிலையில், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் வளாகத்தில் உள்ள பொது கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து பணியாற்றி வருகிறார்.
கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக, அற்புதமின் அண்ணன் மற்றும் அவரது மனைவி இறந்த நிலையில், அவரது மகள் சாருமதியை அற்புதம் தான் வளர்த்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் தான், சாருமதி அற்புதாவின் மற்றொரு அண்ணன் கபாலியின் மகன் கிஷோர் என்பவரை காதலித்து வந்து உள்ளார். இந்த காதல் விஷயம் பற்றி அண்ணன் கபாலிக்கு தெரிய வந்த நிலையில் கடும் அதிர்ச்சியடைந்த அவர், காதலுக்கு காரணம் தங்கையான அற்புதம் எனக்கூறி கடும் கோபம் அடைந்து உள்ளார்.
இதனால், கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், கத்தியுடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலய வளாகத்தில் உள்ள பொது கழிப்பறைக்கு சென்று, தனது தங்கையான அற்புதத்தை கபாலி கத்தியால் வெட்டி உள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த அற்புதத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கபாலி கத்தியுடன் வெட்டுவதற்கு செல்லக்கூடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.