Mon. Jun 30th, 2025

போலீசாரை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!

சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.

சென்னையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில், FIR வெளியான விவகாரத்தில், சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களிடம் சட்ட விதிகளுக்கு புறம்பாக சம்மன் அனுப்பியது மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி அவர்களது செல்போன்களையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் முறையிட்டதால், கடந்த 29 ஆம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, 30.01.2025 அன்று, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்களை, சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்தித்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், கண்ணியக்குறையாக நடத்தப்பட்டது பற்றியும், பத்திரிகையாளர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசாரை இன்று காலையில் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் சம்மன் அனுப்பப்பட்ட பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அப்போது, “பத்திரிகையாளர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்படமாட்டார்கள் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போனுக்கான அத்தாட்சி வழங்கப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர். அதன்படி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக அதற்கான அத்தாட்சி சான்றையும், சிறப்பு புலனாய்வுக் குழு வழங்கி உள்ளது.

அத்துடன், இந்த வழக்கு விசாரணையில் எதுவும் குறை இருக்கும் பட்சத்தில் மன்ற நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளை அணுகலாம் என்றும், அவர்கள் உறுதியளித்தனர். மேலும், இந்த விசாரணை சட்டப்படி விதிகளின் படி நடக்கும் என்றும் போலீசார் உறுதி அளித்து உள்ளனர்.

இந்த நிலையில் தான், இன்று விசாரணைக்கு ஆஜரான பத்திரிகையாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கும் வகையில் மன்றம் சார்பாக வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சட்டரிதியாகவும் மற்றும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது. இது தொடரும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதியளிக்கிறது.

எனினும், பல்வேறு பத்திரிகையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க, “அண்ணா பல்கழைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) நடவடிக்கையை கண்டித்தும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நாளைய தினம் 1.02.2025, மாலை 4 மணியளவில், சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆர்பாட்டமானது, கருத்துரிமையை காப்பாற்றவும் நமது பத்திரிகை சகோதரர்களுக்கு தோள் கொடுக்கவும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் ம.சுரேஷ் வேதநாயகம் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மு.அசீப் ஆகியோர் அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *