நடிகர் விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அப்போது, “நாடாளுமன்ற தேர்தலுக்காக நேற்று நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள, ஒரு வாக்கு சாவடியில் வாக்களிக்க செல்ன்ற போது, அவருடன் 200 க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி வாக்கு சாவடிக்குள் சென்றதாகவும், இந்த செயல் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும்” குற்றம்சாட்டினார். இந்த சம்வம் குறித்து, அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.
மேலும், “தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை 10 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடிவரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும்; ஆனால், நடிகர் விஜய் தனது சுய நல விளம்பரத்திற்காக நீலாங்கரை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும், இளைஞர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை அமைக்கும் வகையிலும் செயல்பட்டு உள்ளதாகவும்” அந்த சமூக ஆர்வலர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
அத்துடன், “நடிகர் விஜய் வாக்குச்சாவடியில் காத்திருந்த வாக்காளர்களை அவமதிக்கும் வகையில், வரிசையில் நிற்காமல் காவல் துறையினரின் உதவியோடு தனது வாக்கை செலுத்தியதாகவும், கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே இவ்வாறு செய்வது பொது மக்களுக்கு நல்லது கிடையாது” என்றும், அவர் தனது புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக, “நடிகர் விஜய் சட்டத்தை மீறி இவ்வாறு செயல்பட்டதின் காரணமாக, அவர் மீது உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மேரி செயல்பட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், ஆர்டி.ஐ செல்வம் தனது புகாரில் வலியுறுத்தி உள்ளார்.